Friday 29 May 2020

கொரோனாவும் இயல்பு வாழ்க்கையும்

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் வேளையில் தெருவில் ஆட்களின் நடமாட்டமும் அதிகரித்தபடி இருக்கிறது. எங்கள் தெருவைப் பொறுத்தவரையில் காலையில் முதலில் கேட்கும் சத்தம் பக்கத்து வீட்டின் கீழ்த்தளத்தில் அவர்கள் கட்டுமானப்பொருட்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து வீட்டு வாசலில் நிற்கும் வண்டியில் அவற்றை ஏற்றி வைப்பது. இது காலை 5:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் தொடங்கும் அன்றாட நிகழ்வு. இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் வாசல் தெளிக்கும் சத்தம் கேட்கத்தொடங்கும்.
6:30 மணிக்கு ஒரு புல்லட்டின் சத்தம் கேட்கும். காலையில் எழுந்ததும் அவர் புல்லட்டை வாக்கிங் கூட்டிப்போகும் சத்தம் அது…கொஞ்ச நாட்களாக ஓய்ந்திருந்த இந்த சத்தமும் இப்போது கேட்கத் தொடங்கிவிட்டது.
அடுத்தது புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 6:30ல் இருந்து 7:00 மணிக்குள் கேட்கும் மீன் விற்கும் அக்காவின் சத்தம்… இன்றைக்கு புதன் கிழமை என்பதை அவரின் சத்தம் மூலம் தெரிந்து கொண்டேன். பக்கத்து வீட்டில் மோட்டார் போடும் சத்தமும் இந்த நேரத்தில் இணைந்து கொள்ளும்.
7:00 மணிக்கு மேல் கீரைக்காரரின் சத்தம் கேட்கும். அதே நேரத்தில் தெருவின் இந்தக் கோடிக்கும் அந்தக்கோடிக்குமாய் நாலைந்து முறை சென்றபடி இடியாப்பம் விற்பவரின் குரல் மைக்கில் கேட்கும். கிட்டத்தட்ட 9 மணி வரைக்கும் கூட அந்தக்குரல் கேட்டபடியே இருக்கும். அதைத் தொடர்ந்து காய்கறி, பழங்கள் வண்டிகளின் தொடர்ச்சியான சத்தங்கள் மதியம் 12:00 மணி வரைக்கும் தொடரும்.
9:30ல் இருந்து 10:30க்குள் பூக்கார அம்மாவின் சத்தம் கேட்கும்..ம்மா மல்ல்ல்லீய்ய் முல்லேய்ய்ய் என்று பிசிரில்லாமல் ஒரே ராகமாகப் பாடிக்கொண்டு நடந்து வருவார் அந்த அம்மா. கூடையில் சுமந்தபடி பொருட்களை விற்பவர்கள், சைக்கிளில் விற்பவர்கள், வண்டி, தள்ளுவண்டி, வேன் என பெரும்பாலான வியாபாரிகள் இப்போதெல்லாம் மைக்கிலேயே தான் சத்தம் குடுத்துக்கொண்டு வருகிறார்கள். இதில் விதிவிலக்காக இன்னும் தங்கள் குரலை நம்பி இருப்பவர்கள் சென்னை வீதிகளில் ரொம்பவே குறைவு.
பூக்கார அம்மாவைப்போலவே எங்கள் வீட்டுக்குப் பூ கொடுக்கும் பெரியவரும் டிவிஎஸ் 50 இல் ”சாமந்தீஈஈ…..ரோஸ்ஸ்ஸ்ஸ்” எனக் குரல் கொடுத்துக் கொண்டே தான் வருவார். இதற்கு முன் குடியிருந்த வீட்டில் இரண்டாவது மாடிக்கு நடந்து வந்து 30 ரூபாய்க்குப் பூக்களைக் கொடுத்துச் செல்வார்…அப்போது சைக்கிளில் வருவார். ஒரு சாயலில் அப்பாவை நினைவுபடுத்துவதால் அவர் மூச்சிறைக்கப் படியேறி வருவதைப் பார்த்து….” கீழ கேட்லயே கவர்ல வச்சிடுங்கய்யா நான் எடுத்துக்குறேன்” என்றாலும் ”பூ வாடிப்போவும்மா” என்பார்…கொஞ்ச நாட்கள் அவரை வீட்டுப்பக்கம் காணவில்லை….
பிறகு ஒரு நாள் சத்தம் கேட்டு நானே இரண்டு மாடி இறங்கிப் போய் என்னவென்று விசாரிக்கலாம் எனப் போனபோது அவரே கேட்டைத் திறந்து வந்து கொண்டிருந்தார்….கைகளில் பூக்கவரோடு…”என்னங்கய்யா ஆளையே காணோம்” என்றதும் ”கொஞ்சம் நெஞ்சுவலியாச்சுதம்மா….அதான் யாவாரத்துக்குப் போகவேணாம்னு பசங்க சொல்லிட்டாங்க…நமக்கு தான் வீட்ல உக்கார முடியலையே அதான் கொஞ்சம் சரியானதும் வந்தேன்…வாடிக்கையா வாங்குறவங்களுக்கு மட்டும் கொடுக்குறதும்மா” என்றார். பிறகு மெல்ல தயங்கியபடியும் கொஞ்சம் ஆர்வத்துடனும் “எம்மா…எதும் விசேசமா” என்றார்….”ஆமாங்கய்யா அஞ்சு மாசம்” என்றேன்…”அதான பார்த்தேன்…எம்மா இனிமே இப்டிப் படியிறங்கி வராதம்மா…நான் இங்க பைக் பக்கத்துல பூ வச்சிட்டுப் போறேன்..பத்திரம்மா” என்றுவிட்டுப் போனார்…
ஏழாம் மாதத்தில் அந்த வீட்டைக் காலி செய்து விட்டு இப்போதிருக்கும் வீட்டுக்கு மாறி வந்தோம்…அவரிடம் தகவல் சொல்ல முடியவில்லை.
இங்கே வந்து இரண்டு மாதங்கள் கழித்து வளைகாப்புக்கு ஊருக்குப் போனதோடு வெண்பா பிறந்து ஐந்தாம் மாதத்தில் தான் இந்த வீட்டுக்குத் திரும்பி வந்தேன்…அதன் பிறகு பல நாட்கள் கழித்து தெருவில் அவர் சத்தம் கேட்டு ஓடிப் போய் பால்கனியில் நின்று அவரை அழைத்ததும் சந்தோசமாக வீட்டு வாசலில் வந்து நின்றார்…வெண்பாவைக் கொண்டு போய்க் காண்பித்ததும்…”எம்மா குழந்தைய தூக்கிப் பார்க்கட்டுமா” என்று கேட்டார்… “இந்தாங்கய்யா” என்று கொடுத்தேன்…சந்தோஷமாக வாங்கிக் கொண்டவர்…”எம்மா அப்டியே உன்னையாட்டம் இருக்கும்மா….ராஜாத்தீ…தாத்தாவப் பாருடா கண்ணு” என்றபடி “பேர் என்னாம்மா” என்றார்… “வெண்பா” என்றதும் ”இந்தக் காலத்துப் புள்ளைங்க என்னவோ புதுசு புதுசா பேர் வைக்குறீங்க ஆனா மைசூர்பா மாதிரி இதுவும் நல்லா தான் இருக்கு” என்று சிரித்தார்….
வெண்பா வளர்ந்து அவர் சத்தம் தெருவில் கேட்டதும் “ம்மா பூக்காரத்தாத்தா வந்துக்கார் பாரு” என்று என்னை இழுத்துக்கொண்டு பூ வாங்க படியிறங்குவாள்…சில நாட்கள் அவள் கையில் பையையும் காசையும் கொடுத்து விட்டு பால்கனியின் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன்..கீழே கேட் எப்போதும் தாழ்ப்பாள் போட்டிருக்கும்….அவர் தாழ்ப்பாளைத் திறந்து அவளிடம் பூவைக் கொடுத்து விட்டு அவள் படியேறி மேலே என்னிடம் வந்து சேரும் வரை கீழே நின்று கொண்டிருப்பார்.
வீட்டில் ஏற்கனவே பூக்கள் இருந்தால் வெண்பாவிடம் “பூ இருக்கு தாத்தா நாளைக்கு வாங்கிக்குறோம்னு பால்கனியில் நின்னு சொல்லிட்டு வா” என்று அவளை அனுப்பி விட்டுப் பின்னாலேயே போவேன்…
ஒருநாள் அவர் சத்தம் கேட்டு இப்படியே சொல்லி அனுப்ப நான் பின்னால் வருவதற்குள் அவளே வீட்டுக்குள் திரும்பி வந்து “ம்மா தாத்தா உன்ன கூப்பிடுறாரு” அன்றதும் பால்கனியில் நின்றவாறே “பூ இருக்குங்கப்பா…நாளைக்கு வாங்கிக்குறேன்” என்றவளை “பூ கெடக்கும்மா…இங்க பாரு வண்டி வாங்கிருக்கேன்…பேத்திய கூட்டிட்டு வாம்மா…இதக் காட்டத்தான் கூப்ட்டேன்” என்றார்…அப்போது தான் கவனித்தேன்…முகப்பில் சந்தனம் தெறிக்க மாலையணிந்தபடி ஒளிராத ஹெட்லைட் கண்கள் மின்ன அவரின் டிவிஎஸ்50 நின்று கொண்டிருந்தது. பின்னால் கூடையில் ரோஜாவும் சாமந்தியும். நிஜமாகவே அவரைப் பார்க்க அன்றைக்கு மிக சந்தோஷமாய் இருந்தது. அப்பாவின் கனவுகளில் ஒன்று ஒரு டிவிஎஸ்50 வாங்கிவிட வேண்டுமென்பது. அவரின் கண்களில் அன்றைக்குக் கூடியிருந்த நீர்மையில் அந்தக் கனவு பூர்த்தியாகியிருந்தது.
வழக்கம் போல செயல்படத்துவங்கியிருக்கும் தெருவிற்குள் இன்னும் வந்து சேராமலிருப்பது இடியாப்பக்காரரின் குரலும், பூக்காரப்பெரியவரின் குரலும், காய்கறிக்காரப்பெரியவரின் கட்டைக் குரலும் தான்…இவர்கள் மூவரும் வந்து தெருவின் அன்றாடப் பரபரப்பில் கலந்து விட்டால் நானும் கூட ஃபேஸ்புக்கில் ’லிவ் இன் ரிலேஷன்ஷிப் வித் கொரோனா’ என்று பதிவிட்டுவிடலாம் என நினைத்திருக்கிறேன்….
அசைவப்பதிவு

எச்சரிக்கை : அசைவப்பதிவு….சைவர்கள் மாற்றுப்பாதையில் செல்லவும்….
இன்றைக்குக் காலையில் கோழிக்குழம்பு வைத்து தோசைக்கு தொட்டுக்கொள்ள தட்டில் போட்டு சாப்பிட உக்கார்ந்ததும் பக்கத்தில் வந்து ’என்ன சாப்பிடுற’ எனக்கேட்ட வெண்பாவிடம் ’சிக்கன்டி..இந்தா சாப்பிடு’ என நீட்ட இரு கைகளையும் முன்னே நீட்டித் தடுத்து உடலைப் பின்னே இழுத்து நகர்ந்தவள் “சிக்கன் பாவம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
நானும் இவளுக்கு அசைவத்தைப் பழக்க எவ்வளவோ முயற்சி செய்தும் சாப்பிட மறுக்கிறாள்… தெரியாமல் சாப்பாட்டுக்குள் நன்றாகப் பிசைந்து கொடுத்தாலும் மென்று துப்பி விடுகிறாள்…சரி இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் பழக்கி விடலாம் எனப் பார்த்தால்…நாட்கள் தான் வருடக்கணக்கில் போகிறது…அவள் தின்பாளில்லை.
பேச்சு, பார்வை, கோவம், முறைப்பு எல்லாவற்றிலும் அம்மையைக் கொண்டிருப்பவள் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் அவள் அப்பாவைப் போல வந்துவிடுவாளோ எனப் பயமாகவும் இருக்கிறது.
மாமியார் வீட்டுக்கு வந்த புதிதில் ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஆட்டுக்கறி எடுப்போமா கோழிக்கறி எடுப்போமா என அத்தை என் விருப்பத்தைக்கேட்டபோது (நமக்கு கறியென்றால் ஆட்டுக்கறி தான்…கோழியெல்லாம் வெறும் சிக்கன் என்ற அளவிலேயே முடிந்து விடும்) ஆட்டுக்கறில உங்களுக்கெல்லாம் என்ன பிடிக்குமோ அதே எடுக்கலாம் என்றதும் குழம்பிவிட்டார்…ஆட்டுக்கறில தனியா என்னம்மா எடுக்கறது….கறி எடுத்துட்டு வந்து குழம்போ அல்லது சுக்காவோ வச்சிரலாம் என்றார்….நான் அதன் பிறகும் “இல்ல அத்தை …ஆட்டுக்கறின்னா அதுல தலையா, மூளையா, ரத்தமா, ஈரலா, எலும்பா, குடலா, கொத்துக்கறியா, சுவரொட்டியா, காலா என அடுக்கிக்கொண்டே போகவும் மொத்த வீடும் மிரண்டு போய் என்னைப் பார்த்தது….
உதய் மட்டும் மெதுவாக என்னிடம் ’இ.ந்.த… வாலெல்லாம் சாப்பிட மாட்டீல்ல’ என்று கேட்டு நிம்மதிப்பெருமூச்சு விட்டுக்கொண்டதும் நான் யோசனையுடன் ’அதெல்லாம் எங்க ஊர்ல சாப்பிட்டதில்ல சென்னையில சாப்பிடுவாங்களா? கேள்விப்பட்டிருக்கியா?’ எனக்கேட்டதும் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்தது இன்னமும் ஞாபகம் இருக்கிறது….
அப்புறம் தான் தெரிந்தது…அவர்கள் அசைவமெல்லாம் நாள், கிழமை பார்த்து நறுக்காக, நாசுக்காக சாப்பிடுபவர்கள் …தவிர ஒரு வேளைக்கு மட்டுமே அதை சாப்பிடுபவர்கள் என்பதும்….இதில் உதய்க்கு சிக்கன் மட்டுமே விருப்பம் அதுவும் ரோஸ்ட் செய்தால் மட்டுமே கூடுதலாக ரெண்டு துண்டு தொண்டையில் இறங்கும்…மத்தபடி ஆட்டுக்கறியெல்லாம் விரும்பி சாப்பிடுவது கிடையாது. மீன்குழம்பு என்றால் சமையலறைக்குள் வந்து தண்ணீர் கூடக் குடிக்கிற ஆள் இல்லை என்று மாமியார் பெருமையுடன் சொன்னதும் எனக்குப் பேரதிர்ச்சி…(அடேய்களா….நான்லாம் பக்கத்து வீட்ல மீன்குழம்பு வச்சாகூட அவங்க வீட்டு கிச்சன்ல போய் உக்கார்ந்துருவேன்டா)
பின்னாளில் வெண்பா வயிற்றில் இருந்த போது நான் மட்டும் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டு விட்டு மசக்கையில் வாந்தியெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாமியார் ஃபோன் செய்யவும், மீன்குழம்பு வைத்த பாத்திரத்தை உதய் கழுவிக் கொண்டிருப்பதைச் சொன்னவுடன் எதிர்முனையில் சில நிமிடங்கள் பேச்சு மூச்சில்லை… இன்றைக்கும் உதய் மீன் , கருவாடு சாப்பிடுவது கிடையாது..
அம்மா வீட்டில் வாரத்திற்கு மூன்று நாட்கள் அசைவம் தான். கறி, கோழி, மீன், கருவாடு என அசைவம் இல்லாத வாரமே கிடையாது…வீட்டில் எல்லோருமே அசைவம் விரும்பி சாப்பிடுபவர்கள். அப்பா பொதுவாகவே உணவை ரசித்துச் சாப்பிடுகிறவர். எந்தப் பதார்த்தமானாலும் மென்றுகொண்டிருக்கும் நேரத்திலேயே அந்த பதார்த்தத்தின் சேர்மானப்பொருட்களைச் சொல்லி….கூடவே நிறை குறைகளையும் யாராக இருந்தாலும் பொட்டில் அடித்தாற் போலச் சொல்லிவிடுவார்.
வீட்டில் எல்லோரும் ஒன்றாக உக்கார்ந்து சாப்பிடும் போது அப்பா, பிள்ளைகள் எங்களை கவனித்துக் கொண்டே சாப்பிடுவார் சாப்பிடச் சொல்லியும் கொடுப்பார். ’அந்த நல்லிய எடுத்துக்கடி’ ‘தட்டுல ரெண்டு தட்டு தட்டிட்டு ஒரு உறிஞ்சு உறிஞ்சு’ ’ஆங்ங்…அப்படித்தான்’ என்பார்… ’இந்தா இத சாப்பிட்டுப்பாரு கறுக்முறுக்குன்னு இருக்கும்’ என்று கோழி, ஆட்டின் சதைப்பகுதியில் மெல்லிய ஜவ்வு போல ஆனால் எலும்பை விடக் கொஞ்சம் உறுதி குறைந்த பகுதியைக் குழம்பில் தேடி எடுத்துக் கொடுப்பார்….அதை இன்றைக்கும் நாங்கள் கருக்மொறுக் என்றே தான் சொல்கிறோம். அப்பாவைப் பொறுத்தவரை ஆட்டு எலும்பென்றால் மென்று துப்பி விட வேண்டும்…கோழி எலும்பென்றால் மென்று சாப்பிட்டு விட வேண்டும்…அவ்வளவு தான் …சத்தெல்லாம் எலும்பிலே தானிருக்கிறதென்பார்.
குழம்பில் கிடக்கும் கெளுத்திமீனின் சினைப்பை ரவை போலப் பக்குவமாய் வெந்திருக்கும். அதைத் தனியே எடுத்துத் தின்னக்கொடுப்பார்…. அதுவொரு தனி ருசி… அதை செனப்பு என்போம். குழம்போ வறுவலோ மீனின் ஜவ்வரிசி அளவிலான வெந்த கண்களை எப்போதும் எங்கள் கண்கள் தேடும். வறுவலில் மீனின் தலையோடு ஒட்டியிருக்கும் அது குழம்பில் சில நேரம் தனியே மிதந்து கிடக்கும்…ஒவ்வொருவரின் தனிப்பங்கு கணக்கில் வராமல் அதை எடுத்துப் பதுக்குவதற்கு எப்போதும் எங்களிடையே போட்டியிருக்கும்.
சென்னையில் ஹாஸ்டலில் இருந்த நாட்களில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சிவக்க வதக்கிய பின் துண்டு கருவாடு சேர்த்த சட்டியையெல்லாம் தூக்கத்தில் கூட நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் படுப்பது போல் கனவு வரும் எனக்கு. கறிக்குழம்பில் மிதக்கும் கெட்டிக் கொழுப்பும், அல்வாத்துண்டு பதத்தில் வதக்கிய மூளையும், லச்சகொட்டைகீரை சேர்த்து தேங்காய்ப்பூ தூவிய ரத்தப்பொரியலும், பெரிய பயிறு போட்டு சமைத்த ஆட்டுக்கால் குழம்பும், பஞ்சாய் வெந்திருக்கும் குடல்கறியும் நினைத்த மாத்திரத்தில் நாசிக்குள் ஏற்றும் வாசனையை மூளை எப்போதும் சேமித்து வைத்திருக்கிறது.
எந்த வயதிலிருந்து அசைவம் சாப்பிட ஆரம்பித்திருப்பேனென ஞாபகம் இல்லை. ஆனால் ஐந்தாம் வகுப்பின் மதிய உணவு இடைவேளை முடிந்த சில நிமிடங்களுக்குப் பின் ஒரு மூன்றடுக்கு டிபன் கேரியரில் எனக்கும் அக்காவுக்கும் சேர்த்து இரண்டடுக்கில் சுடு சோறும் மேலடுக்கில் கொதிக்க கொதிக்க ஆட்டுக்கால் குழம்பும் கொண்டு வந்து அப்பா எங்களுக்கு ஊட்டி விட்டது மட்டும் நினைவிலிருக்கிறது. அதுவும் வெற்றிச்செல்வி பல்லைப்பிடுங்கி விட்ட அதே வேப்பமரத்தினடியில் தான். சோறும் குழம்பும் சேர்த்துப் பிசைந்து உள்ளங்கையிலேயே ஆற வைத்து அப்பா ஊட்டி முடிக்கவும் அவர் கொண்டு வந்திருந்த சின்னக் கைத்துண்டில் எங்களுக்கு வாய் துடைத்து விட்ட மாத்திரத்தில் வகுப்பறைக்குத் தெறித்து ஓடி வந்து அமர்ந்த பிறகும் நாடியிலும் மேலுதட்டிலும் காரத்தின் காரணமாய் வியர்த்து வழிந்தது இன்னும் மறக்கவில்லை.
விரும்பிச் சாப்பிடும் எந்த உணவானாலும் அதன் வாசமும், ருசியும் மூளைக்குள் சேகரமாக வேண்டும்…நினைத்த மாத்திரத்தில் வாசனையை நாசிக்கும் ருசியை நாவிற்கும் கடத்திச் செல்லும் உணர்வு வாய்க்க வேண்டும். அந்த உணர்வில் தான் வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும் என்று நம்புகிறேன்.
அசைவத்தில் தான் இப்படியே தவிர மற்ற உணவுகளை உண்ணும் போது 'அம்மா ரொம்ப டேஸ்ட்டா இருக்கு 'என்பதும் 'இத எப்டி பண்ணுன' எனக்கருத்தாய் கேள்வி கேட்பதுமாக இருக்கிறாள். எந்த உணவானாலும் அதன் நிறைகுறைகளை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அது தான் அந்த உணவுக்கும் அதை சமைத்தவர்களுக்குமான மரியாதை என்பது என் எண்ணம். அந்த வகையில் தாத்தா செல்வராஜனின் பேரைக் காப்பாற்றி விடுவாள் போலத் தான் தெரிகிறது.
காய்கறி விற்கும் பெரியவர்

வேளச்சேரிக்குக் குடி வந்த புதிதில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையெல்லாம் ஆதம்பாக்கம் மார்கெட்டிலேயே தான் வாங்கிக் கொண்டிருந்தோம். வீட்டுக்குப் பக்கத்தில் கடைகள் இல்லாமலில்லை.ஆனால் குறிப்பிட்ட காய்கறிகள் மட்டுமே இருக்கும்..தவிர சென்னையில் பரவலாகக் கிடைக்கும் கோவைக்காய், சுரைக்காய், சௌ சௌ, புடலங்காய் அளவிலான பாகற்காயெல்லாம் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. அதனால் மொத்தக்கடையில் வாங்கலாமென்று தான் ஆதம்பாக்கத்துக்குப் போய் வாங்கி வந்து கொண்டிருந்தோம்…
அங்கே எனக்குப்பிடித்த சேனைக்கிழங்கு, மிதி பாகற்காய், சேப்பங்கிழங்கு தவிர சீசனில் கிடைக்கும் சிறுகிழங்கு,சீனிக்கிழங்கு, பழங்கள் என எல்லாவற்றையும் ஒரே கடையில் வாங்க முடிந்தது….அப்போதும் வாரம் ஒருமுறை தான் காய்கறி வாங்கி வந்து வைப்போம்..
வெண்பா பிறக்கும் வரையிலும் வீட்டில் ஃப்ரிட்ஜ் வாங்கவில்லை…தவிர்த்திருந்தோம்..எனக்கு பால், தயிர், முட்டை எல்லாவற்றையும் ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்துவது பிடிக்காத ஒன்று. அவ்வப்போது தேவைப்படுவதை அப்போது ஃப்ரெஷ்ஷாக வாங்க வேண்டும். அப்போதைய சமையலை அப்போதே சமைத்து சாப்பிட வேண்டும் என்பதே அதன் காரணம். இந்த லாக்டவுன் காலம் ஆரம்பிக்கும் முன்பு வரை கூட ஃப்ரிஜ்ஜில் அதிகக் காய்களை வாங்கி வைத்துப் பழக்கமே இல்லை…பெரும்பாலும் வெண்ணெய், சீஸ், பனீர், மாவு போன்றவை தான் ஃப்ரிஜ்ஜில் கிடக்கும்.
இந்த வீட்டுக்குக் குடி வந்த பின் ஆரம்பத்தில் எதிரில் உள்ள கடையிலும் பிறகு அருகில் உள்ள மார்கெட்டிலுமாக காய்கறிகள் வாங்கி வந்தாலும் ஆதம்பாக்கத்துக்கும் நேரம் கிடைக்கும் போது போய் வருவோம். அதன் பிறகு ஃபீனிக்ஸ் மாலுக்கு வெண்பாவுக்காக வாரம் ஒருமுறை போக வேண்டி இருந்ததால் அங்கே பிக் பஜாரில் கொஞ்ச காலம் காய்கள் வாங்கி வந்து கொண்டிருந்தோம்…அதில் அதிக வெயிட்டைத் தூக்கிக் கொண்டு வாசல் வரை நடந்து வந்து பின்பு பக்கத்து தெருவில் பைக்கை பார்க் பண்ணியிருக்கும் இடம் வரை உதய் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டியிருந்த சிரமத்தால் அதையும் நிறுத்தினோம்.
அதன் பிறகு தினமும் தள்ளு வண்டியில் தெருவில் காய்கள் கொண்டு வருபவர்களிடம் வாங்கத் தொடங்கினேன். அதில் பக்கத்து வீட்டு அக்கா ரெகுலராக ஒரு பெரியவரிடம் காய்கள் வாங்குவார். வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு கயிறில் பையைத் தூக்கிப் போட்டு அதில் தேவைப்படும் காய்களின் அளவை சொல்லி வாங்கி விட்டு மேலே இழுத்துக் கொள்வார்…பின் அந்தப் பையிலேயே காசையும் போட்டு மீதத்தை வாங்கிக் கொள்வார். ஆரம்பத்தில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பேன். கீழேயிருந்து அவர் ஒரு விலை சொல்வதும் அந்த அக்கா இங்கிருந்து கேள்வி கேட்பதும் பல நேரங்களில் வேடிக்கையாக இருக்கும்.
ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு முன்னேயிருந்த வீட்டில் வியாபாரத்தை முடித்து விட்டு சில்லறை கொடுக்கப் பையைத் தேடியவர் அப்போது தான் காசுப் பை இல்லாததைக் கவனித்திருக்கிறார். பதட்டத்தோடு தெருவின் முனை வரைக்கும் ஓடி அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தார். காய்கறி வாங்கிக் கொண்டிருந்தவர்களும் பரபரப்பாக அவரோடு சேர்ந்து தேடினார்கள். ஆனால் அந்தப் பை கிடைக்கவில்லை. சுற்றி நின்ற எல்லோரும் ஒவ்வொரு கேள்வியாய் அவரைக் கேட்டுக் குடைந்து கொண்டிருக்க, அவரோ கூண்டுக்குள் சிக்கிய எலி போல பதட்டத்துடன் இங்குமங்கும் பார்த்தபடி தவித்துக் கொண்டிருந்தார்.
எனக்கு அப்பாவின் ஞாபகம் வந்தது. அவர் ஒருமுறை தள்ளுவண்டியில் பழங்கள் விற்று வியாபாரம் முடித்து வீட்டுக்கு வந்த பிறகு தான் துட்டுப்பை(அப்படித்தான் நாங்கள் சொல்லுவோம்) இல்லாததைக் கவனித்தார். அப்பாவுக்கு சட்டை தைக்கும் டெய்லர் அப்பாவின் கால்சட்டைத்துணியில் மீந்திருக்கும் துணியில் துட்டுப்பைகளை தைத்துக்கொடுப்பார்…நாலைந்து நிறங்களில் வீட்டில் துட்டுப்பைகள் இருக்கும். இரண்டு பிரிவாக தைக்கப்பட்டிருக்கும் ..ஒன்றில் ரூபாய் நோட்டுகளும் மற்றொரு பக்கம் சில்லறைகளும் போடுவதற்கு வசதியாய்.. அதில் எப்போதும் சில்லறைகள் போடும் பக்கம் தான் எடை கூடிக்கிடக்கும்….இன்னும் கூட தொலைந்து போன அந்த சிமிண்ட் நிற துட்டுப்பை கண்ணிலேயே இருக்கிறது. இன்னும் மீதமிருக்கும் துட்டுப்பைகளை அப்பாவின் நினைவாக அப்படியே வைத்திருக்கிறோம்…
பெரியவர் எப்போதும் சாயம் போன ஒரு மஞ்சள் பையிலே தான் காசைப் போடுவதைப் பார்த்திருக்கிறேன்…அப்பாவின் கைகளில் துட்டுப்பையின் கைப்பிடி ஒரு பாம்பைப் போல லாவகமாக சுற்றியிருக்கும். இவர் தள்ளுவண்டியில் தராசு பக்கத்தில் வைத்திருப்பார் போல. கடைசிவரை அதைக் காணவேயில்லை. பக்கத்து வீட்டு வாசலில் தன் வழுக்கைத் தலையில் கை வைத்து அவர் சோகமாக உக்கார்ந்ததும் அதற்கு மேல் வேடிக்கை பார்க்க முடியாமல் அன்றைக்கு உள்ளே வந்து விட்டேன்.
மறுநாள் அவர் குரல் எப்போது கேட்கும் எனக் காத்திருந்து அன்றைக்கு கொஞ்சம் காய்கள் வாங்கிக் கொண்டேன்…அன்றைக்கு அக்கம் பக்கத்தில் ஒருவரும் வாங்கவில்லை. எனக்கோ அவருடைய காசுப்பை கிடைத்ததா எனக்கேட்க சங்கடமாக இருந்தது. ஆனால் அவர் எப்போதும் போல வியாபாரம் செய்து கொண்டிருந்ததால் பேசாமல் வீட்டுக்கு வந்து விட்டேன். அதன் பிறகு பக்கத்து வீடுகளில் பலரிடம் கேட்டுப் பார்த்தும் யாரும் அவரிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை என்று தெரிந்து அதோடு அந்த சம்பவத்தை மறக்கடித்தேன்.
இன்றைக்குக் காலையில் வேளச்சேரியில் தள்ளுவண்டியில் காய்கறிகள் விற்பவருக்குக் கொரோனா பாதிப்பு என்று செய்தியில் பார்த்தபோது ஒரு வேளை இவராக இருக்குமோ என்று வருத்தமாக இருந்தது. அக்கம்பக்கத்திலும் அவர் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனச் சொல்கிறார்கள். அவரோடு சேர்ந்து அவருடைய குடும்பத்தினர் 11 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று.
பெரியவர், ஆள் கட்டையாக இருப்பார். கணீர் குரல்…வழுக்கை தலையும், வட்ட முகமும் நெற்றியில் குங்குமக்கீற்றுமாக வேட்டி சட்டையில் கலகலவென்று வியாபாரம் செய்கிற ஆள். இந்த முறை ஊருக்குப் போய் வரும் போது அப்பாவின் துட்டுப்பையில் ஒன்றை எடுத்து வந்து அவருக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது நான் போக முடியாவிட்டாலும் ஊரிலிருந்து தம்பி வரும் போது எடுத்து வரச் சொல்லிவிடுவேன்.
பெருசு காய்கறி வண்டியோடு என்றைக்குத் திரும்பி வருகிறதோ அன்றைக்கு அப்பாவின் துட்டுப்பையைக் கையில் கொடுத்து எப்படி லாவகமாக சுற்றிக்கொள்ள வேண்டுமென சொல்லிக்கொடுக்க வேண்டும்…பத்திரமா திரும்பி வா பெருசு … அயம் வெய்ட்டிங்
கொரோனாவும் கோல் போஸ்ட்டும்
கிட்டத்தட்ட எண்பதுக்கும் மேற்பட்ட கதவு எண்களும் அதை விட மும்மடங்கு எண்ணிக்கை கொண்ட வீடுகளும் உள்ள எங்கள் தெருவில் மொத்தம் இரண்டு மளிகை+காய்கறிக் கடைகள். இரண்டு கடைகளும் தெரிவின் இரண்டு கோடியில் இருப்பவை...அதில் ஒன்று எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள கடை..வீட்டு வாசலில் இருந்து ஒரு லாங் ஜம்ப் செய்தால் கடையின் வாசலில் போய் பொத்தென்று விழுந்து விடக்கூடிய தூரம் தான்.
தினமும் இரண்டு மாநகராட்சி ஊழியர்கள்( இளம் பெண்கள்) தெருவிலுள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டிலுள்ளவர்களின் உடல்நிலை குறித்து குறிப்பெடுத்துக்கொண்டும் காலையிலிருந்து மாலை வரை இந்தக்கடைசிக்கும் அந்தக் கடைசிக்கும் நடந்தவாறே தெருவில் போய்க்கொண்டு இருப்பவர்களிடம் மாஸ்க் அணியுமாறு வலியுறுத்திக் கொண்டும் இருப்பார்கள்.
இன்றைக்கு காலையில் தெருவில் ஒரே பரபரப்பு. அந்தப்பெண்களில் ஒருவர் எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள கடையில் இருந்து யாரெல்லாம் பொருட்கள் வாங்கினீர்கள் என்று விசாரித்துக்கொண்டிருந்தார்...நாங்கள் தினமும் காலையில் பால் வாங்குவது எதிர் கடையில் தான்...இந்த கொரோனா தடைக்கால ஆரம்பத்தில் இருந்தே அவர் காய்கறிகள் வாங்கி விற்பதைக் குறைத்து விட்டிருந்தார்...அதனால் காய்கறிகளை பெரும்பாலும் தெருவில் வருகிற தள்ளுவண்டிக்காரர்களிடமே தான் வாங்கி வந்தோம்...அல்லது பக்கத்து தெருவில் உள்ள மார்க்கெட்டில் நிறைய காய்கறிக்கடைகள் இருக்கிறது...ஆனால் அங்கு சென்று வாங்கியது மிக மிகக் குறைவான தடவைகள் தான்...
அந்தப் பெண்கள் பரபரப்பாக விசாரித்ததன் காரணம் மளிகைக்கடைக்காரருக்குக் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது தான்...அக்கம்பக்கம் எல்லா வீடுகளிலும் குறைந்தபட்சம் பாலுக்காகவேணும் தினமும் போகிற கடை.. தெருவில் நின்று கொண்டிருந்த எல்லாருடைய முகத்திலும் பீதி..
கடைக்காரரின் அண்ணனுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி அவருடைய மளிகைக் கடையையும் சீல் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னவுடன் எல்லோருக்கும் குழப்பம்...காரணம் என்னவென்றால் இந்த கடைக்காரரின் அண்ணனும் இவரும் இந்த கடையிலே தான் இரு வேளைகள் மாறி மாறி அமர்ந்து வியாபாரம் செய்பவர்கள்...அவருக்கென்று தனியாகக் கடை ஏதும் இல்லை...இதைத் தெளிவுபடுத்தியதும் பெரும்பாலான முகங்களில் நிம்மதிப் பெருமூச்சு...
ஆக கொரோனா தொற்று வந்தவர் தெருவின் இன்னொரு முனையில் கடை வைத்திருப்பவர் என்று உறுதியானது...அவருடைய அண்ணனுக்கு பக்கத்துத் தெருவில் இன்னொரு காய்கறிக்கடை உள்ளது..இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்...கடைக்கான காய்கறிகள் கோயம்பேட்டிலிருந்து தான் வந்திருக்கிறது...
நாங்கள் பொதுவாகவே அந்தக்கடையில் அன்னம் தண்ணீர் புழங்குவதில்லை என்பதால் இப்போதைக்கு பயம் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றாலும் எதிர்கடை, மாவுக்கடை, முட்டைக்கடை, கறிக்கடை என்று பாதிப்புக்குள்ளாக வைக்கும் காரணிகள் இன்னும் நிறையவே இருக்கிறது...
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தம்பதிகள் சித்த மருத்துவப் பொருட்களை விற்பவர்கள் என்று தெரிந்தவுடன் 'கபசுரக் குடிநீர், ஒரு பாக்கெட் வாங்கி வைத்திருந்தோம்...நிலவேம்புக்குடிநீர் முன்பு வாங்கியதே பிரிக்கப்படாமல் இருந்தது...விட்டமின் சி மாத்திரைகளை லாக்டவுனுக்கு முன்னேயே வாங்கி வைத்திருந்தோம்...
மாவுக்கடை வைத்திருக்கும் அம்மாவின் மகள் சித்த மருத்துவர் என்பதால் இப்போது அரசு பரிந்துரைத்துள்ள Ars Alb 30 ஒரு குப்பியை காலையில் மாவு வாங்கப் போகும் போது வாங்கி வைத்தாயிற்று...
தெருவின் இரண்டு முனைகளையும் பேரிகார்ட் வைத்து அடைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது...நடமாடும் வட்டம் சுருக்கப்பட்டிருக்கிறது....
ஹாக்கி விளையாட்டில் மொத்த ஆடுகளத்தை ஆக்ரமித்து 11 பேர் ஆடுவதைக் காட்டிலும் D top என்கிற கோல் போஸ்ட்டுக்கு அருகில் உள்ள அரை வட்டத்துக்குள் பந்து இருக்கும் போது ஆடும் ஆட்டம் சுவாரஸ்யமானது...தவிர டை பிரேக்கரின் போது கோல்கீப்பரை எதிர்த்து கோல் போட 11 பேரில் இருந்து ஐந்து பேருக்கு ஆளுக்கொரு வாய்ப்பு கொடுக்கப்படும்....நிலவேம்புக்குடிநீர், கபசுரக்குடிநீர், Ars Alb, விட்டமின் சி யோடு ஐந்தாவதாக இத்தனை நாள் பேணி வந்த சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம், உடலின் தாங்குதிறனோடு மன வலிமையையும் சேர்த்து ஐந்து பேராக ஆட்டையில் நிற்போம் 😜...D Topக்குள் பந்து சென்று விட்டால் அது கோலில் முடிய வேண்டும் என்பது பொதுவான ஆட்ட விதி....
ஆனால் இந்த முறை கோல்போஸ்ட்டில் நாம் நின்று கொண்டிருக்க டி டாப்பில் கொரோனா நின்று கொண்டிருக்கிறது....பார்க்கலாம்
வேம்பும் பல்லும்....

பக்கத்து வீட்டில் பெரிய வேப்பமரம் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் கொஞ்சம் வேப்பிலைக்கொத்து கேட்டிருந்தேன்…..மாடிக்குப் போகும் போது பறித்துத் தருகிறேன் எனச் சொல்லியிருந்தார் அந்த அக்கா. காலையில் பறித்துக்கொண்டு வந்து பால்கனியில் நின்று இந்தா என்று இரு கைகள் சேர்த்துப்பிடிக்குமளவு வேப்பிலைக் கொத்தைக் கொடுத்தார்…..
“தண்ணில ஊறப்போட்டு வீடு துடைக்கவா” என்றார்….
“இல்லக்கா”
“அப்பறம் என்ன செய்வ?”
“நான் ஆவி பிடிக்க வெந்நீர் போட்டுக் குளிக்கக் கேட்டேன்”
”அப்டிக் குளிச்சா நல்லதா”
“நான் உடம்பு வலிக்கு இப்டிப் பண்ணி குளிப்பேங்க்கா….வேப்பிலைன்னு இல்ல…புளிய எல, நொச்சி எல, யூக்கலிப்டஸ் எலன்னு நிறைய இருக்கு….”
“ஆங்ங்ங் …உங்கள மாதிரி ஊர்க்காரங்களுக்கு தான் இதெல்லாம் தெரிது…நாங்கல்லாம் மெடிக்கல்ல மாத்திரய வாங்கிப்போட்டு கம்னு போய் படுத்துக்குவோம்” என்றார்
சிரித்துக்கொண்டே வேப்பிலையை வாங்கி வந்தேன்….
அதில் பாதிக்குப்பாதி பூக்கள்….
சின்ன வயதிலிருந்தே வேப்பம்பூக்கள் மீது ஒரு ஈர்ப்பு…. மல்லி, பிச்சி போல இல்லையென்றாலும் வேப்பம்பூக்களுக்கு ஒருபிரத்யேக மணம் உண்டு… சிறுவயதில் வேப்பிலை, வேப்பம்பூக்கள் சார்ந்த ஞாபகங்கள் அதன் வாசனையோடே இன்னும் நினைவில் மிச்சமிருக்கிறது…
அப்போதெல்லாம் மாதம் ஒருமுறையாச்சும் வேப்பிலைக்கொழுந்தை அம்மியில் மையாக அரைத்து அரை நெல்லியளவு உருண்டை பிடித்து அப்பாவும் அம்மாவும் சாப்பிட வைப்பார்கள்….தொண்டைக்குழி தாண்டுவதற்குள் உள்ளங்கையில் கடலைமிட்டாயோ, வெல்லமோ அல்லது தேன்மிட்டாயோ வைக்கப்படும்….
பள்ளி விடுமுறைக் காலங்களில் உதிர்ந்து கிடக்கும் வேப்பங்கொட்டைகளை பொறுக்கி எடுத்துப் பையில் கொண்டு போய்க்கொடுத்தால் உள்மார்க்கெட்டில் நாட்டுமருந்துக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சி தராசில் எடை போட்டு கிலோவுக்கு இவ்வளவு என்று காசு கொடுப்பார்….
ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது முன் பற்களில் இடப்பக்கம் இரண்டாவது பல்லொன்று நான்கு நாட்களாகவே லேசாக ஆடுவது போலிருந்தது….நுனி நாக்கால் பல்லை வாயின் உள்ளிருந்து தள்ளிப்பார்த்து ஆடுவதை உறுதி செய்துகொண்டேன். மதிய உணவு இடைவேளையில் வேப்பமரத்தடியில் சாப்பிட்டு முடித்து உக்கார்ந்திருந்தபோது வெற்றிச்செல்வி தான் ”நான் வேணா பல்லை பிடுங்கி விடட்டா” எனக் கேட்டாள்….
பக்கத்தில் மண்ணில் கிடந்த புளியமுத்தை எடுத்துப் பாவாடையில் துடைத்து விட்டு இடப்பக்கம் தானே வலிக்கிறது என வலப்பக்கக் கடைவாயில் வைத்து ஒதுக்கி அப்போது தான் கடிக்கத் தொடங்கியிருந்தேன்….புளியமுத்தின் மேல்தோல் கடினமாக இருக்கும்….கடைவாய்ப்பல்லில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கடித்துத் திங்கும் போது மேல்த்தோலின் துவர்ப்பு ருசி மெல்ல நாவைத் தொடும்…பிறகு புளிய முத்தை நீள்வாக்கில் வைத்து அழுந்தக்கடித்தால் வாய்க்குள்ளேயே ரெண்டாய் உடையும்…பிறகு பொறுமையாய் மென்று திங்கலாம்…. கடுக்கென்று கடித்ததில் கடைவாய்ப்பல்லே உடைந்து போய் புளிய முத்தோடு பல்லையும் சேர்த்து ரத்தத்தோடு துப்பியவள்களும் இருந்தாள்கள்…. பாடவேளையின் போது கூட டீச்சரையும் பாடத்தைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்ட ஸ்நாக்ஸ் அது.
பல் பிடுங்கும் சடங்கில் வெற்றிச்செல்வியின் மீது நிறையவே நம்பிக்கை இருந்தது… தமிழரசிக்கும் அவள் தான் பல்லைப்பிடுங்கி விட்டிருந்தாள். ஆனால் அது கடைவாய்ப்பல்….வெற்றிச்செல்வியின் பற்களே கூட நவகிரகங்கள் போல ஒன்றுக்கொன்று முறைத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கும்…அவள் சிரிக்கும் போது ஒவ்வொரு பல்லும் தனியாய் சிரிப்பது போலிருக்கும்… பின்னாளில் அவளொரு வல்லிய பல்டாக்டராய் வருவாள் என சத்தியமாய் நம்பியிருந்தேன்….ஆனாலும் தின்று கொண்டிருக்கும் புளியமுத்தைப் பாதியில் துப்ப மனமில்லை…இன்னும் பத்து நிமிடங்களாவது ஆகும் தின்று முடிக்க…. “இப்ப வேண்டாம் ரீசஸ் விடும்போது பிடிங்கிரலாமா?” எனக்கேட்டதற்கு சரியென்றாள்..
மதியம் முதல் இரண்டு பீரியட் முடியும் வரை பெஞ்ச்சின் நுனியிலேயே பரபரப்பாய் உக்கார்ந்திருந்தேன்….ரீசஸ் மணி அடித்ததும் வெற்றிச்செல்வியும் நானும் ஒன்றாய் வெளியே வந்தோம்….வேப்பமரத்தடி…மண்ணுக்குள் அங்குமிங்கும் தேடிப்பார்த்து ஒரு கனத்த குச்சியைக் கையில் எடுத்திருந்தாள் வெற்றிச்செல்வி…அது தான் அவளது பல் பிடுங்கும் ஆயுதம்…. வேப்பமரக்கிளையின் உடைந்த ஒரு பகுதியின் சிறு குச்சி தான் அது…
குச்சியின் மீதிருந்த மண்ணைத் தட்டி விட்டுப் பாவாடையில் ஒருமுறை துடைத்து விட்டுக் கையில் வாட்டமாகப் பிடித்துக்கொண்டாள்… “ஆ காட்டு” முதலில் அவள் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பல்லைப் பிடித்து மேலும் கீழும் ஆட்டிப்பார்த்துக்கொண்டாள்….எனக்குப் பல் ஆடுவது போலவே தெரியவில்லை….அவள் விரல்கள் தான் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது… அவள் மேலும் மேலும் சக்தியனைத்தையும் விரலுக்குக் கொண்டு வந்து பல்லை அசைத்துக்கொண்டிருந்தாள்…
வலி கூடிக்கொண்டேயிருந்தது….அப்போது தான் நற நறவென்று மெல்ல மெல்ல பல் ஈறை விட்டு விலகுவது தெரிந்தது….அப்படீன்னா பல் இத்தனை நாளா ஆடல….நான் நாக்க வச்சுத் தள்ளுறதால அது ஆடுறது போலத் தெரிஞ்சிருக்கோ என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் வெற்றிச்செல்வி பல்லைப் பாதி சாய்த்துவிட்டாள்…..
வலியில் உயிர் போக ஆரம்பித்துவிட்டது… வேணாம்… என அவளிடம் சைகையில் சொன்னதை அவள் கவனிக்கவேயில்லை அல்லது கவனித்தது போலக்காட்டிக்கொள்ளவேயில்லை…. ஏகலைவன் புறாக்கண்ணின் மீது கொண்ட இலக்காய் அவள் சுற்றுப்புறம் அத்தனையும் மறந்து என் பல்லையே குறி வைத்து குச்சியால் அழுத்திக்கொண்டிருந்தாள்…
இப்போது எல்லாப்பல்லுமே வலிப்பது போலிருந்தது….நான் பேச வாயெடுத்தால் அவள் வைத்திருக்கும் குச்சி இடம் மாறி நாக்கிலோ அல்லது கன்னத்தின் உள்பகுதியிலோ நிச்சயம் காயப்படுத்திவிடக்கூடும் என்று தெரிந்தது….அவளோ நான் பிறந்ததே உன் பல்லைப்பேர்த்து எடுக்கத்தான் என்பது போல பல்லும் கருத்துமாய் அவள் காரியத்தில் ஆழ்ந்திருந்தாள்….
இடைவேளை முடிந்து மணியடிக்கத் தொடங்கியது….திடீரென்ற மணிச்சத்தத்தில் ஒரு நொடி அதிர்ந்தவள் இன்னும் பல்லைப்பிடுங்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் கடைசிக்கடைசியாக மொத்த வலுவையும் சேர்த்து அழுத்தியதில் முன்னம்பல் உடைந்து ரத்தம் வழியத்தொடங்கியது…..
வெற்றிச்செல்வி வெற்றி பெற்றேவிட்டாள்…..
வேகவேகமாய் குழாயடிக்கு ஓடி வாயைக்கழுவும்போதே “ஏல....பல்ல எடுத்து பத்திரமா வச்சிக்கோல….சாணிக்குள்ள போட்டு உருண்ட பிடிச்சு வீட்டுக்கூர மேல போட்ரு” என்றாள்…. உள்ளங்கைக்குள் உடைந்த பல்லைப்பத்திரப்படுத்தி பேப்பருக்குள் மடித்து வைத்தேன்….
வீட்டுக்குப்போவதற்குள் பல்லிலிருந்து வலி உச்சி மண்டைக்கு ஏறியிருந்தது….வாயின் முன்பக்கம் வீங்கிப்போய் குழந்தை ஹனுமான் போல இருந்தேன்….அந்த வீக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அன்றைக்கு அப்பா அடி வெளுத்திருப்பார்…
வலியில் அழுது கண்கள் முகம் என எல்லாமும் வீங்கி மறுநாள் காய்ச்சல் கண்டிருந்தேன்….வேப்பங்குச்சியினாலோ அல்லது காய்ச்சலுக்குக்கொடுத்த மருந்தாலோ மூன்று நாட்கள் வரை வாய்க்குள் ஒரே வேம்பின் கசப்பு…..
அதற்குப்பிறகு ரொம்பவே சோதித்து தான் பல் முளைத்தது….அதுவும் நான் முளைக்குமோ இல்லை காலம் பூராவும் ஓட்டைப்பல்லியாக இருந்து விடுவோமோ என்று பயந்து போய் அடிக்கடி நுனிநாவால் நிரடிவிட்டுக்கொண்டே இருந்ததில் அந்தப்பல் தெற்றுப்பல்லாகவே போய்விட்டது….காலேஜ் முடியும் வரை கூட சிரிக்கும் போது வாயை மூடிக்கொண்டு தான் சிரிப்பேன்….ஒரு கட்டம் வரை மிகுந்த தாழ்வுணர்ச்சி கொள்ள வைத்திருந்தது அந்தப்பல்…..
ஊரில் போன வருடம் திருவிழா சமயத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தண்ணீர் ஊற்றப் போயிருந்தபோது வெற்றிச்செல்வியைப் பார்த்தேன்…என்னைப்போலவே நிறைகுடத்தில் மஞ்சளும் வேப்பிலையும் தளும்பத் தளும்ப தண்ணீர் எடுத்து வந்து கொடிக்கம்பத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள் ….அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை….நெருங்கிப்போய் நான் யாரெனச் சொல்லிவிட்டு இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறாள் எனக்கேட்க வேண்டும்போல் இருந்தது…ஒரு வேளை அவள் பல்டாக்டராகவே இருந்தாலும் இனி ஜென்மத்துக்கும் அவளிடம் போய்ப் பல்லைக்காட்டுவதாய் இல்லை….