Friday 8 May 2015

புன்னகை என்ன விலை

நாலு நாளைக்கு முன்னாடி சென்னைல இருந்து மதுரைக்கு கிளம்பினோம். உதய்க்கு மட்டும் தான் டிரெயின் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகியிருந்தது. எனக்கு வெயிட்டிங் லிஸ்ட் 1ல வந்து நின்னுருச்சு. வேளச்சேரியில இருந்து கிளம்பி மவுண்ட் ஸ்டேஷன்ல எனக்கு ஒரு ஓப்பன் டிக்கெட் எடுத்துட்டு எலக்ட்டிரிக் டிரெயின்ல எக்மோருக்கு போய்ட்டு இருந்தோம்.
நாங்க உக்கார்ந்திருந்த ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல மொத்தமே பத்து பேர் தான் இருந்தாங்க. டிக்கெட் கன்ஃபர்ம் ஆகாத கடுப்புல கொஞ்சம் டென்ஷன்ல இருந்தேன். எதிர்ல ஒரு அம்பது வயசுக்காரர் என்னைப் பார்த்து ஃப்ரெண்ட்லியா சிரிச்சாரு. நான் இருந்த டென்ஷன்ல “யாருய்யா நீ எதுக்கு என்னையப் பார்த்து சிரிக்குற?”ன்னு மனசுக்குள்ளயே கேட்டுட்டு வேற பக்கம் திரும்பிட்டேன். அப்புறமா நைஸா அவர் என்னைப் பார்க்காத நேரம் அவரைப் பார்த்தா அவர் அப்பவும் சிரிச்ச முகமா தான் இருந்தாரு....இன்னும் சொல்லப் போனா அங்கே இருந்த எல்லாருக்குமான புன்னகை ஒண்ணு அவர்கிட்ட இருந்தது.
அந்த சிரிப்பு என்னை ரொம்பவே யோசிக்க வைக்க இவரப் பார்த்து சிரிக்காம இருந்தா மட்டும் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகிடப்போவுதா என்னான்னு யோசிச்சுட்டே அவரைப் பார்க்க அவர் கிட்ட திரும்பவும் அதே புன்னகை. இந்த முறை நானும் லேசா சிரிச்சு வச்சேன். அவர் கிட்ட இருந்து பதிலுக்கு ஒரு சின்ன ஆமோதிப்பு இதான் என் வெற்றின்னு சொல்ற மாதிரி இருந்தது எனக்கு. மறுபடியும் முகத்தை திருப்பிக்கிட்டேன்.
அடுத்த ஸ்டேஷன்ல பார்வையில்லாத ஒருத்தர் ஏறினார். கையில வச்சிருந்த சின்ன தம்பட்டத்தை தட்டிக்கிட்டே ஒவ்வொருத்தர் பக்கமும் குத்துமதிப்பா நடந்துக்கிட்டே “பூ மழை தூவி“னு பாடிட்டு இருந்தார். இப்போ நம்ம புன்னகை மன்னன் அவரோட சட்டைப்பையில இருந்து சில்லரை எடுத்துப் பாட்டு பாடினவர் பாத்திரத்துல போட்டார். அப்படியே என்னைப் பார்த்து ஒரு புன்னகை.
“ம்ம்...இருய்யா நானும் காசு போடுறேன் பாரு”ன்னு மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டே உதய் கிட்ட இருந்து காசு வாங்கி நானும் பாத்திரத்துல போட்டுட்டு அவரை நைஸா பார்த்தேன். அதே சிரிப்பு. பார்வையில்லாதவர் சத்தமா பாடிட்டே அந்த கம்பார்ட்மெண்ட்டோட மறுபக்கத்துக்கு மெதுவா நடக்க ஆரம்பிச்சாரு.
அவரோட பாட்டுச்சத்தம் தேயுற வரைக்கும் புன்னகை மன்னன் கால் மேல கால் போட்டு பாட்டுக்கு ஏத்த மாதிரி காலையும் தலையையும் பக்கவாட்டுலயும், மேலயும் கீழயுமா லேசா ஆட்டி அதே புன்னகையோட கேட்டுட்டு இருந்தார்.
எக்மோர் ஸ்டேஷன நெருங்கும் போது தான் சுருக்குன்னு தோணுச்சு. அவர் அந்தப் பார்வையில்லாதவருக்கு வெறும் பிச்சையா அந்தக் காசைப் போடல....அந்தப் பாட்டை ரசிச்சு அதுக்கான சன்மானமாத்தான் குடுத்திருக்கார். ஆனா நான் அப்டிச் செய்யாம வெறும் பிச்சை தான் போட்டிருக்கேன்னு ஒரு குற்றவுணர்ச்சி வந்தது. அந்தப் பார்வையில்லாதவருக்கு நிச்சயமா என்னோட காசு மரியாதை கொடுக்கல..... ஆனா அந்தப் புன்னகை மன்னன் போட்ட காசுல மரியாதையும் சேர்ந்திருந்தது அப்போ தான் உறைக்க ஆரம்பிச்சது.
தோள்ல பேக்கை மாட்டிட்டு கம்பார்ட்மெண்ட் வாசலுக்குப் பக்கத்துல நின்னு திரும்பிப் பார்த்தேன். அவர் இப்பவும் சிரிச்ச முகத்தோட எதிர்ல இருந்தவரப் பார்த்துட்டு இருந்தார். அவர் என்னைப் பார்க்கலைன்னாலும் நான் அவரப் பார்த்து சிரிச்சுட்டு வந்தேன்

5 comments:

  1. யதார்த்தம்...

    உணர்ந்தது அருமை...

    ReplyDelete
  2. புன்னகை என்ன விலை.? நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete